வருவீரே எங்கள் யா நபியே
தங்கள் வருகைக்கு தினமும் காத்திருந்தேன்
தருவீரே அண்ணல் மா நபியே
தங்கள் தரிசனம் யாசித்து பாடி நின்றேன்
தங்கிட வீடொன்று கட்டி வைத்தேன்
அதை தங்களுக்காகவே பதிவு செய்தேன்
உத்தமர் வாழ போவதனால்
அதன் உள்சென்று நானும் பார்த்தறியேன்
ஏழையின் வீடு எளியவன் கூடு
தாங்கள் வந்து விட்டாலோ அதற்கில்லை ஈடு
இருப்பதை அறிந்தால் பலர் வருவார்
தங்கள் உறக்கத்தை ஓய்வை கலைத்திடுவார்
ஆதலினால் பிறர் பார்வை படாதே ஒரு
ரகசிய இடத்தை கட்டி வைத்தேன்
அன்னை ஆமினா இல்லமும் அல்ல
அது ஹலிமா தாயின் வீடும் அல்ல
கண்மணி கதீஜா மாளிகையும் அல்ல
கற்பக ஆய்ஷா குடிலும் அல்ல
வஹீ வந்த ஹீரா குகையும் அல்ல
ஹிஜ்ரி வரலாற்று தவ்ரு குகையும் அல்ல
ஒட்டகம் அழைத்து ஒதுங்கி நின்ற
அபூஅய்யூப் அன்சாரி இல்லமும் அல்ல
ஆசையை வாசலாய் திறந்து வைத்தேன்
எந்தன் காற்றுக்கு சுவாசத்தை அனுப்பி வைத்தேன்
பக்தியின் பத்திகள் கொளுத்தி வைத்தேன்
விழும் கண்ணீரை பன்னீராய் தெளித்து வைத்தேன்
காஷ்மீர் ரோஜா சிகப்பழகு
மண்ணில் காதலர் விரும்பும் வடிவழகு
சுற்றி அளந்தால் கை அளவு
உள்ளே சுற்றியே பார்த்தால் உலகளவு
இதயம் என்றொரு பெயர் வைத்தேன்
அதை இரஸுலின் இல்லமாய் நான் வைத்தேன்
உள்ளமே இல்லமாய் மாறாதா
அதில் இரஸுலே குடி வரக்கூடாதா
=======================================
உள்ளம் என் இரஸுலின் இல்லம்
கவி ஆக்கம்: ஆலிம் புலவர் ஹுசைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பஈ