வாய் திறந்தால் அல்லாஹ்வென வாய் திறப்பேன்
உம்மென இருந்தால் முஹம்மதென மௌனமாய் கிடப்பேன்
கண் திறந்தால் கஃபாவை காண்பதற்கே துடிப்பேன்
கண் மூடினால் மதீனாவின் கனவுகளில் மிதப்பேன்
உலகத்தை நேசிக்கும் பேதையரே - இன்ப
பேரின்ப சுகம் காண வருவீரோ
அல்லாஹ் முஹம்மது அன்பால் இணைந்தது
இரண்டுமே ஒன்று அல்ல என்றாலும் வேறு அல்ல
என்முகம் கண்டவர் இறைவனைக் கண்டார்
என்பது நபி மொழி வார்த்தையன்றோ
நபி சொல் கேட்டவர் என் சொல் கேட்டார்
என்பது இறைவனின் ஆயத்தன்றோ
அண்ணலின் இதயம் வாழும் - அல்லாஹ்வை தேடுவேன்
அவனுக்குள் குடி புகுந்த - பெருமானை பாடுவேன்
குர்ஆனின் நாவெடுத்து - குணநபியைப் போற்றுவேன்
கோமானின் சொல்லெடுத்து - வல்லோனை வாழ்த்துவேன்
ஜம்ஜம் நீர் பருகும் போது - கௌதரை நான் எண்ணுவேன்
தொழுகையில் மிஃராஜுக்கு - நபியுடன் தான் செல்லுவேன்
ஒரு வரம் தான் தருவேனென்றால் - நபியை மட்டும் வேண்டுவேன்
உலகத்தை வெறுப்பாய் என்றால் - நபியை வைத்துக் கொள்ளுவேன்
வானுலகக் கூட்டணிக்குள் - நானும் ஒன்றுக் கூடுவேன்
வள்ளல் மீது ஸலவாத்தோத - வல்லோனுடன் சேருவேன்
ஸலவாத்தின் ஓசை கேட்டு - கோள்கள் ஆடக் காண்கிறேன்
அர்ஷோடு குர்ஸில் கூட - அருள் மயக்கம் பார்க்கிறேன்
அண்ணலுக்காய் படைத்த உலகம் - அதிலே நாமும் வாழ்கிறோம்
அவர்களுக்காய் படைத்த பொருளை - அனுபவித்து போகிறோம்
நபிகளின் வருகைக்காக - உலகம் முன்னர் இருந்தது
நபிகளின் புகழை பேச - உலகம் இன்னும் இருக்குது
மனிதரோடு மனிதராக - நபிகள் தோற்றம் இருந்தது
மலக்குகளின் தலைவரோடு - பேச்சும் அங்கு நிகழ்ந்தது
இறைவனின் அடிமை என்று - புனித நாவு உரைத்தது
எனது ஹபீபு நீங்களென்று - இறையின் வாக்கு ஒலித்தது