ஆயிரம் நாளிங்கே வருவதுண்டு
ஆயினும் இது போல் புனிதமாய் ஒரு தினம் வருமோ
யார் முகம் காண வானம் இருந்ததோ
யாரை சுமக்க பூமி தவம் கிடந்ததோ
யார் வருவாரென வேதங்கள் சொன்னதோ
தூதரவர் தோன்றி வந்த நாளே
அருட்கொடையாய் முஹம்மதென்னும்
ஆருயிர் இங்கே வந்துதித்த நாள்
நபி பெருமான் தோன்றிய திருநாள்
நாம் கொண்டாடும் ஆனந்த பெருநாள்
இது உலகின் தேசிய திருநாள்
வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள்
அருள் ஆயிரம் இறங்கும் ஒரு நாள்
அன்னை ஆமினா தாயான முதல்நாள்
தந்தை அப்துல்லாஹ் காணாத விதிநாள்
அப்துல் முத்தலிப் பாடி மகிழ்நாள்
அன்று மக்காவே ஒளியால் திகழ்நாள்
அந்த அரேபிய நாட்டை உலகில்
நன்கு அறிமுகமாக்கிய விதை நாள்
தாய் பாலுக்கு புனிதம் வரும் நாள்
தாலாட்டுக்கும் மகிமை தரும் நாள்
வாய் முத்தங்கள் முத்தி பெரும் நாள்
இந்த மண் மீது சுவனம் வரும் நாள்
அனாதைகளுடனே வாழ
அந்த அல்லாஹ்வின் அருட்கொடை வரும் நாள்
ஆகாயத்தில் விண்மீன் உதிர்ந்து
அங்கு அதிசயம் நிகழ்ந்ததை சொல்லும் நாள்
கஃபாவின் சிலைகள் கவிழ்ந்து
அவை கண்மூட போவதை சொல்லும் நாள்
பல மாற்றங்கள் இயற்கை நடத்தி
அந்த பண்பாளர் வரவை சொல்லும் நாள்
மண்ணில் மானுடம் உயிர் பெற்று எழும் நாள்
தீய மடமைகள் அடிபட்டு விழும் நாள்
இன வேற்றுமை நீக்கிய தவ நாள்
என்றும் எல்லோரும் சமத்துவம் எனும் நாள்
புது விதியினை பூமிக்கு தரும் நாள்
மனம் பூபாளம் பாடிடும் இசை நாள்
:: ஆலிம் புலவர் ஹுசைன் முஹம்மது மன்பயீ, திண்டுக்கல்