கண்ணே என் ரஹ்மானே கதி நீயே அல்லாஹ்வே


LYRICS


கண்ணே என் ரஹ்மானே [காதலனுடன் ஒரு கலந்துரையாடல்]
கவி: ஆலிம் கவிஞர் மௌலவி ஹூஸைன் மன்பஈ ஹழ்ரத் அவர்கள்

கண்ணே என் ரஹ்மானே கதி நீயே அல்லாஹ்வே
தலைவா இரு கைகள் நான் ஏந்தினேன்
கேட்காமல் தருகின்ற வல்லோனே உன்னிடத்தில்
கேட்டது கிடைக்கும் என்று நான் நம்பினேன்
கெஞ்சி கெஞ்சி உனை நான் வேண்டினேன்
தூயோனே மன்னவா துணை நீ தான் அல்லவா

பிடரிக்கும் அருகே நீ இருப்பதை அறியாமல்
பிழையாய் எங்கெங்கோ நான் தேடினேன்
இடர் எனை தொடும் நேரம் அழுதழுதுனையழைத்து
இன்பங்கள் தொடும் நேரம் மறந்தோடினேன்
எனக்கென உன் வாசல் என்றென்றும் திறந்திருக்க
ஏனோ அறியாமல் நான் வாடினேன்
என் இசை நீ கேட்க நான் பாடினேன்
தூயோனே மன்னவா துணை நீ தான் அல்லவா

உன் மொழி நான் கேட்க உவந்திடும் போதெல்லாம்
உயர் மறை குர்ஆனை நான் ஓதினேன்
உன் குணம் எதுவென்று தெரிந்திட ஆசை வந்தால்
உத்தம நபி குணத்தை நான் காணுவேன்
உனை நான் நெருங்கி வந்து எனை தர நினைத்து விட்டால்
உடனே ஸஜ்தாவில் நான் வீழுவேன்
உயிரே கரைந்தாலும் நான் வாழ்கிறேன்
தூயோனே மன்னவா துணை நீ தான் அல்லவா

முஹம்மது நபியென்னும் முகவரி எழுதாமல்
அனுப்பிய கடிதம் உனை சேராதன்றோ
அஹ்மது நபி சென்ற அருள் வழி நடக்காமல்
அஹதென்னும் உன் வீடு தெரியாதன்றோ
அஹ்மதர் முகம் கண்டு அகமது சுகம் கண்டு
அருளுக்குள் நான் மூழ்கும் வரம் கேட்கிறேன்
அடைக்கலம் தா என்று நான் கேட்கிறேன்
தூயோனே மன்னவா துணை நீ தான் அல்லவா