ஹிஜ்ரா பாடல்
கவி: கவிஞர் தா காஸிம்
பாலை வெளிக் காரிருளில் தூயநபி நாயகர் தான்
பாதம் நோகச் செல்கின்றார் பாரீரோ ! -அவர்
தக்கத்துணை பக்கருடன் தனியிறைவன் ஆணையேற்று
மக்கம் விட்டு மதீனம் சென்றார் வாரீரோ!
1) கொன்றுவிட கூடிநின்ற குறைசியரின் கண்மயங்க
அண்ணல் நபி செல்கின்றார் வாரீரோ! - அந்த
நெஞ்சங்களில் பகை உறங்க மஞ்சத்திலே அலி உறங்க
மாநிலமே உறங்குவதை பாரீரோ! (பாலை)
2) அண்ணல் நபி செல்கையிலே விண்ணிருக்கும் தாரகைகள்
பொன் விளக்கு ஏந்துவதை பாரீரோ! - அங்கு
தன் குளிரை தாங்கி வந்து தாஹா நபி பாதம் தொட்டு
தென்றல் பாடும் வாழ்த்தொலியை கேளீரோ! (பாலை)
3) தகதகக்கும் காலைவேளை தவுர் குகையில் நபியிருக்க
பகை குறைஷியர் நெருங்குகின்றார் பாரீரோ! - அங்கு
இறையருளே முந்தி வந்து சிலந்தி வலை பிண்ணக் கண்டு
திரும்புகின்ற குறைஷியரைக் காணீரோ! (பாலை)
4) அனற்பாலை சுடுமணலில் அண்ணலவர் நடக்கையிலே
துன்பம் செய்த துரோகிகளை பாரீரோ! - அந்தத்
துன்பத்திலும் இன்பங்கண்டு பொறுமையினைக் கடைபிடித்த
அண்ணலவர் செய்தியினைக் கேளீரோ! (பாலை)
5) அண்ணல் நபிக் காபத்தென்றால் அண்டகோளம் சிதறிவிடும்
அன்சாரித் தோழர்களே வாரீரோ! - திருநபியைக்
அழைப்பதற்கும் திரு இஸ்லாம் பார்ப்பதற்கும்
திரு மதீனத்து நண்பர்களே வாரீரோ ! (பாலை)