மழலை பாக்கியம் தந்திடு ரஹ்மானே
رب هب لي من لدنك ذريه طيبه
بصاحب المدينة المباركة الطيبة
அர்ஷின் அரசே சிரசைப் பதித்தே
பிருஷமாக வேண்டுவோம்
விருட்ஷமாய் எம் கிளைகள் விரிய
குழந்தைகள் பல ஈந்திடு
அல்லாஹ் உன்னை சொல்லால் துதிக்க
செல்ல பிள்ளை தந்திடு
வல்லாரலி மகன் ஹஸன் ஹுஸைன் போல்
நல்ல மக்களை வழங்கிடு
வெல்லும் வலிமார் வழியில் செல்லும்
நல்ல குழந்தை தந்திடு
நல்ல கலிமா நாவில் நவிழ
செல்ல பிள்ளை தந்திடு
இல்லை பிள்ளை என்றே அழுவோர்
கண்ணீர் துடைத்திடு நாயகா
மஞ்சம் புரண்டே நெஞ்சம் மகிழ
பிஞ்சுக் குழந்தை ஈந்திடு
அலமாரியிலே அடுக்கி வைத்த
ஆடை குலைக்க ஆள் இல்லை
உளமாறி யாம் உள்ளம் புலம்பும்
நிலைகள் மாறிட செய்திடு
அடுக்களையிலே சமைக்கயிலே
வெறுமையில் நெஞ்சு வேகுது
அன்னம் சமைத்து அழகாய் ஊட்டும்
வண்ணக் குழந்தை வழங்கிடு
தொட்டில் போட்டு தொட்டுத் தழுவ
ஆசை நெஞ்சை வாட்டுது
அன்பாய் பாடி ஆரத்தழுவ
கைகள் தானாய் ஆட்டுது
கொஞ்சும் தமிழில் கொஞ்சி மகிழ
கெஞ்சும் எம் முகம் பாரல்லாஹ்
அஞ்செழுத்தில் ஆனவனே
கொஞ்சம் எம் மொழி கேளல்லாஹ்
அன்னை தந்தை இல்லானே எமை
அன்னை தந்தை ஆக்கிடு
பிறப்பும் இல்லான் பெறவும் இல்லான்
பெருமை உனதாய் ஆக்கிடு
தருவோன் நீயே பெறுவோர் நாங்கள்
மற்றோர் போல மாற்றிடு
அருளால் மக்கட் செல்வம் ஈந்து
பெற்றோராய் எமை ஆக்கிடு
பெருமான் நபிகள் பெருமை பெறவே
பெறவே செய்வாய் பேரிறை
பெருமாண்பின் எம் பெருமான் பேரே
பெருகிடச் செய் நாயனே
ஜகரிய்யா நபி இப்ராஹிம் போல்
இறைவா எம் துஆ ஏற்றிடு
சந்தம் கமழ சந்தானம் பெற
வேண்டிடும் அவா ஏற்றிடு
**
கருணை உள்ள ரஹ்மானே! உனது ஹபீப் நாயகத்தின் பொருட்டாலும் நீ பொருந்திக் கொண்ட உனது நேசர்களின் பொருட்டாலும் எங்களின் வேண்டல்களை ஏற்று அருள்வாயாக!
இந்த பிரார்த்தனையைக் கொண்டு உன்னிடம் இறைஞ்சுவதன் மூலம் எங்களில் மழலைச் செல்வம் இல்லாதோர்க்கு நல்ல ஸாலிஹான பிச்சிலங்களை உனது கருணையால் வழங்கி அருள்வாயாக! ஆமீன்