*நாவினில் நாளும் நயம் தரும் நாமம்*
நபிமணி தாஹா உங்கள் நாமம்
காவினில் பூக்கும் கவின் மலர் தேனின்
கனிசுவை யூட்டும் கண்ணிய நாமம்
இறைவனின் வானின் அமரரும் அன்பாய்
இதமுடன் வாழ்த்தும் எழில் மிகு நாமம்
இறைவனின் தூய அர்ஷதன் மேலே
எழுத்தினில் வாகாய் இலங்கிடும் நாமம்
இறைவனை தாழ்ந்தே வணங்கிடும் போதும்
இசைவுடன் தீனோர் இயம்பிடும் நாமம்
பாவத்தில் நீந்தும் புவியினர் நெஞ்சில்
பன்பது மேவ உதவிடும் நாமம்
காசினி இதழில் சரித்திர ஏட்டில்
கனகத்தின் வரியாய் திகழ்ந்திடும் நாமம்
அஹ்மது என்றும் முஹம்மது என்றும்
அனைவரும் போற்றி புகழ்ந்திடும் நாமம்
கவி: மர்ஹூம் SMB மஹ்மூது ஹுஸைன் காஹிரி