அருமை ஸஹாபாக்களே رضي الله عنهم
நபி அண்ணலாரின் தோழர்களே
உங்கள் பெருமை கூறி முடியாது
அந்த பேரின்பம் எவருக்கும் கிடைக்காது
அதிகாலை நபி முகத்தில் கண் விழித்தீர்
அவர் அருள் விழிக்குள் உம் உருவம் அசைய நின்றீர்
காலமெல்லாம் அருகருகே வாழ்ந்திருந்தீர் - மென்
கஸ்தூரி வாடைக்குள் குடி புகுந்தீர்
நாயகமே தொழ வைக்க பின் தொடர்ந்தீர்
திரு நாவாலே மறையோத கேட்டிருந்தீர்
வஹீ வந்து இறங்குவதை பார்த்திருந்தீர்
அது வந்ததுமே உடன் ஒதும் வாய்ப்படைந்தீர்
போருக்கு நபியோடு அணிவகுத்தீர்
மணற் புழுதியிலே கொடி பிடித்து முன் நடந்தீர்
தாக்குதலை உம் நெஞ்சில் தாங்கி வந்தீர்
எங்கள் தாஹாவை காத்திடவே உயிர் துறந்தீர்
பெயர் சொல்லி நபி அழைக்கும் பேறு பெற்றீர்
எம் பெருமானே என பணிந்து குதூகலித்தீர்
உங்களது வீட்டுக்குள் அழைத்து வந்தீர்
பெரும் உவப்போடு விருந்தூட்டி திளைத்திருந்தீர்
நரை முடிகள் பக்தியோடு எண்ணி வைத்தீர்
சிறு நாடகமாடி முதுகினிலே முத்தமிட்டீர்
செங்கலுடன் திருவயிற்றை கண்டு விட்டீர்
நபி கை மீது கை வைத்து உறுதி செய்தீர்
வுளு செய்த நீரெடுத்து பூசிக் கொண்டீர்
அவர் உதிரத்தை ஒரு தடவை குடித்து விட்டீர்
தலை முடியை பகிர்ந்தளிக்க பங்கு கொண்டீர்
அதை தலை பாகைக்குள் ஒளித்து வெற்றி கண்டீர்
ஸஹாபாக்கள் என்ற தனிப் பெயர் அடைந்தீர் - நபி
தலைமையிலே தொண்டாற்றும் உயர்வடைந்தீர்
நட்புக்கு இலக்கணமாய் நடை பயின்றீர்
யார் நாயகத்தை நினைத்தாலும் கூட வந்தீர்
கவி: ஆலிம் கவிஞர் மௌலவி ஹூஸைன் மன்பஈ ஹழ்ரத் அவர்கள்