ஹாஜிகளை வாழ்த்தி பாடல்


LYRICS


இறுதிக் கடமை ஆற்றி வந்த
புண்ணியர்களே
மகிழ்ந்து உம்மை வாழ்த்துவோம்
நெகிழ்ந்து பாடிப் போற்றுவோம்

விண்ணவர்கள் போற்றும் நபியை
மனதில் ஏந்தியே
மன்னவன் தன் அழைப்பை ஏற்று
மக்கம் ஏகினீர்
சிறந்த பேறு அல்லவோ
நிறைந்த பாக்யம் அல்லவோ

கோடி நிலவு அழகை விஞ்சும்
புனித வீட்டினை
தேடிச் சென்று நாதன் முன்
பணிந்து வேண்டினீர்
பகர்ந்த நாட்டம் யாவுமே
உகர்ந்து ஏற்க இறைஞ்சுவோம்

உணர்வு மீறி உருகி வந்த
உள்ளத் துளிகளும்
இறையிடம் மன்றாடி அருஷைத்
தொட்டுக் கசியனும்
மிகுந்த கருணை கொண்டவன்
கனிந்து ஏற்று அருளுவான்

தூயக் கடமையில் நிறைந்த
கிரியை யாவிலும்
நேய நபியின் ஞாபகங்கள்
சூழ்ந்துக் கொள்ளவே
திறந்த இதயத்தோடு நீர்
அறிந்து அமல்கள் ஆற்றினீர்

பிணிகள் தீர்க்கும் மதீன நகரில்
அல்லும் பகலுமாய்
நாவினிக்க மன்னர் நபியின்
மதுஹைப் பாடினீர்
உறைந்த பாசம் பொங்கவே
கலந்துக் காதலாகினீர்

தேக்கி வைத்த ஏக்கங்களை
போக்கி தீர்க்கவே
தேம்பித் தேம்பி அவர்களிடம்
மன்றாடி வேண்டினீர்
பிறந்த பாலகரைப் போல்
சிறந்து வீடு திரும்புனீர்

நோயின் பிணிகள் நீங்கிடவும்
மழழைப் பேற்றையும்
கைகள் ஏந்தி கெஞ்சிக் கேட்ட
வேண்டல் யாவையும்
விரைந்து நாயன் ஏற்கவே
கரைந்து கரங்கள் ஏந்துவோம்

நெஞ்சங்களின் எண்ண ஓட்டம்
அறியும் தூயனே
மீண்டும் மீண்டும் யாவருக்கும்
வாய்ப்பை நல்கிடு
கண்ணாலே உந்தன் நேசரை
என்னாளும் காணச் செய்திடு

வாழ்த்து: அஹ்மது ஸாலிஹ் ஃபஹீமீ