பன்னி ரண்டு நாளிதே
பதிபி றந்த நாளிதே
மன்னு யிர்க ளுக்கெலாம்
மதிபி றந்த நாளிதே
வஞ்ச கர்கள் கூடிய
மக்க மாந கர்தனிற்
கஞ்சஞ் சேற் றலர்ந்ததாய்க்
கதிபி றந்த நாளிதே
=====
நபிபி றந்த போதினில்
நலங்கு றைந்த நாடிது
தபமொ ழிந்து வளமிகத்
தண்மை கொண்டொ ளிர்த்ததே
வரண்டி ருந்த வாறுகள்
வாரி நீர்நி றைந்தென
இருக ரைபு ரண்டுநீர்
எங்கு மோட வாயதே
பதிபி றந்த போதினிற்
பார சீகந் தன்னிலே
அதியெ ரிந்து வந்ததீ
அணைந்த தண்ணல் புதுமையே
=====
வணங்கு தெய்வச் சிலையெலா
மசைந்து கீழ்வி ழுந்தன
குணங்கு ளிர்ந்த திங்களார்
குவல யத்து தித்ததால்
அண்ண லார்பி றந்தனர்
அன்று கிஸ்ரா மாளிகை
மண்ணில் வீழ்ந்த ழிந்தது
வல்ல வன்றன் கிருபையால்
குழந்தைப் பருவம் தன்னிலே
குறையி லாத குரிசிலை
வழியிற் கூட்டிச் செல்கையில்
வாழ்த்துக் கூறு மாமெலாம்
=====
மதிபி ளந்த மாநபி
மண்ணில் வந்த மாமதி
பதியின் மிக்க மாபதி
மறைகொ ணர்ந்த சீர்நபி
பாடித் தங்கள் பங்கயப்
பதம்ப ணிந்த பேரராம்
நாடும் கலீ லவுனுக்கு
நாளும் நலம் நல்குவீர்
தூயோன் விண்ண வர்ஸலாத்
தும்ஸ லாமும் கூறினர்
தூய நம்பிக் கையுளீர்
சொல்க ஸலாத் தும்ஸலாம்