மண வாழ்த்துப் பா


LYRICS


மானத்து முகி லாகக்கூடி 
மணிகளாகத் தூவல் தூவி 
முத்து எங்கள் முஹம்மதரின் 
மாசிலா ஆசி....
மனையறம் வீச.......

மன்றினில் இணையும் ஜோடி 
மாண்புடன் நீடு கூடி 
ஏகனிறையின் அருளையேந்தி 
வாகுடன் வாழி.....
வளமுடன் வாழி...

========
இல்லறத்து சிறகடித்து 
நல்லறத்தின் வான் பறந்து 
ஒன்றை ஒன்று பிரிந்திடாத
அன்றிலைப்போல 
ஒன்றி வாழ்வீரே ......

வள்ளல் நபிகள் வழி நடந்து 
வாஞ்சையுறவே சாலச் சிறந்து 
நெஞ்ச மெங்கும் நீங்கிடாத
அன்புமேலோங்க 
நேசம் கொள்வீரே.....  

========
நல்ல குழந்தை பாக்கியமும் 
செல்வ செழிப்பும் ஷோபனமும் 
அல்லல் பிணிகள் எதுவுமின்றி 
அன்பில் வாழ்வீரே 
இன்பில் வாழ்வீரே 

அண்ணல் நபிகள் ஆசியோங்க 
ஆன்றலர் துஆ இலங்க 
நல்ல ஒலிமார் பரிந்துரைக்க  
நயந்து வாழ்வீரே .....
இயைந்து வாழ்வீரே ......

========
ஆடையாகி ஒருவருக் கொருவர் 
கேடில்லாமல் மானம் காத்து 
பாடும்வானம் பாடிபோல 
கூடி வாழ்வீரே 
குழைந்து வாழ்வீரே .....

வானம் கலந்த நீலம் போல 
கானமிசைந்த தாளம் போல 
தேன் கலந்த பாலும் பழமாய் 
இன்று இணைந்தீரே 
நன்று வாழ்வீரே ..........

கவி: கவிமகன் காதர்