அங்கங்கள் அழகழகு
அமுதூட்டும் விழியழகு
பங்கங்கள் போக்கிடுமே
பாங்கான வடிவழகு
தங்கங்கள் தோற்றிடுமே
ஜொலிப்பான முக அழகு
எங்கள்... நபி நாதர்
முழுதான பேரழகு
=========
நயமான அருள் வேந்தர்
நடக்கின்ற நடை அழகு
உயிருக்குள் உறைபவரின்
உவப்பான உடை அழகு
குறை தீர்க்கும் நிறையவரின்
குன்றாத குணம் அழகு
மனம் தேடும் மாதவத்தின்
மணமான மனம் அழகு
நல்லுறவு பேணுமவர்
நலம் சேர்க்கும் நகை அழகு
=========
பேரன்பு கொண்டவரின்
தேனூறும் பேச்சழகு
மொழி ஏதும் பகராத
மௌனத்தின் மூச்சழகு
வாய் திறக்கும் வேளை வரும்
வாகான திக்ர் அழகு
வாய் மூடும் முன் மொழியும்
வடிவான ஷுக்ர் அழகு
பிரபஞ்சம் தேடிடுமே
பிரிய நபி ஃபிக்ர் அழகு
=========
அஹதோனின் ஷுஹ்தினிலே
அகம் மகிழும் அமர்வழகு
நேசர்கள் முகம் நோக்கும்
நேரான நிமிர்வழகு
உணர்வூட்டும் சொல்லெடுத்து
உரையாற்றும் உரை அழகு
நயனத்தில் ஒளி கூட்டும்
நாதாவின் நரை அழகு
நெகிழ்வூட்டும் அஹ்மதவர்
நெஞ்சத்தின் நிறை அழகு
=========
நிகரிலா பேரரசின்
நிறைவான அறம் அழகு
கறை போக்கும் காவியத்தின்
கனிவான கரம் அழகு
உயர்வான உத்தமரின்
உயரத்தின் உயர்வழகு
துயிலாத இதயத்தார்
துயில் கொள்ளும் அயர்வழகு
பெண்ணுரிமை பறை சாற்றும்
பெருமானின் பண்பழகு
=========
அஞ்சாத போர் வீரர்
விரிவான அறிவழகு
மஞ்சு குடை பிடிக்கின்ற
மஹ்மூதர் பரிவழகு
முடி சூடா மன்னவரின்
வடிவான முடி அழகு
ஹஸனாரும் ஹுஸைனாரும்
தவழ்ந்தாடும் மடி அழகு
பிஞ்சான மனம் கொண்டோர்
பிணி தீர்க்கும் பிடி அழகு
===========
வர்ணனை: B.S அஹ்மதுஸாலிஹ்ஃபஹீமி