Yaa Rabbi Bil Mustafa


LYRICS


அருள்வாயே நாயனே!

ஆக்கம்: முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் அவர்கள் (துபாய்)

மவ்லாய ஸல்லி வஸல்லிம்
தாஇமன் அபதா 
அலா ஹபீபிக خகைரில் 
கخல்கி குல்லிஹிமி
==========

என்னைத்தான் படைத்தவனே!
என்றென்றும் நிலைப்பவனே!
என் தேவை நானுரைப்பேன்
நீ தந்து அருள்வாயே!

உருவில்லா உள்ளமையே 
உன்னை நான் உணர்ந்துக் கொள்ளும் 
உள்ளம் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

நாள் தோறும் நபி மீது - நல்
ஸலவாத்தை நான் நவிலும் 
நாவைத் தான் வேண்டுகிறேன்
நீ தந்து அருள்வாயே!

வாழுகின்ற காலமெல்லாம் 
வான் மறையை வாசித்திடும்
வாய்ப்பைத் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே! 

ஈகை குணம் மிகைத்திருக்கும் 
இخக்லாஸில் நிலைத்திருக்கும்
ஈமானை வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!
==========

அள்ளி அள்ளி வழங்கிடவும்
அதனால் கை சிவந்திடவும்
அடியேன் நான் வேண்டுகிறேன்
நீ தந்து அருள்வாயே!

ஏழை எளியோர்களெல்லாம்
எனக்காக உனை வேண்டும்
ஏற்றம் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

உற்றாரும் உறவினரும்
உவகையுடன் உறவாடும்
உயர் நிலை வேண்டுகிறேன்
நீ தந்து அருள்வாயே!

அறிந்திடவே உன்னை நான் 
அறிய வேண்டும் என்னை நான் 
அறிவைத் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

அறிவார்ந்த சான்றோர்கள் 
ஆன்மீக வலிமார்கள்
அருகாமை வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே! 
==========

நன்மை செய்யத் தூண்டுகின்ற 
நலம் செய்ய நாடுகின்ற
நண்பனை வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

கன்னியரைக் கண்டவுடன் 
கண்கள் பணிந்து கவிழ்கின்ற
கற்பைத் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

பணம் காசு குவிந்தாலும் 
பாராட்டு சேர்ந்தாலும்
பணிவைத் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

நோய் கிருமி விலகி மண்ணில்
நோகாமல் நோற்கும் வண்ணம்
நோன்பைத் தான் வேண்டுகிறேன்
நீ தந்து அருள்வாயே!

இன்பம் துன்பம் இரண்டிலுமே 
இணைந்தே தான் வாழும் வண்ணம் 
இல்லாளை வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!
=======

கண் மனைவி மக்களையே 
கண்டு குளிர்ச்சி அடைந்துக் கொள்ள 
கருணைத் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

வாக்கப்பட்டு வந்தவளும் 
வாஞ்சையுடன் வாழ்த்துகின்ற 
வாழ்க்கைத் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

மலக்குல் மவ்த்தை வரவேற்கும் 
மறையும் எந்தன் துணை யிருக்கும் 
மரணம் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

மண்ணறையின் காலமெல்லாம் 
மாப்பிள்ளை போல் நானுறங்க 
மன்னிப்பை வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

நிகழும் மஹ்ஷரிலே 
நின் அர்ஷின் அடியினிலே 
நிழலைத் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!
=======

தாஹா நபி அள்ளித் தரும் 
தடாகத்தில் நீரருந்தி 
தாகம் தீர வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

சுவையான உணவும் வரும் 
சுத்தமான பானம் வரும் 
சுவனம் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

சொக்க வைக்கும் ஹூருல் ஈன்
சொந்தமாக கொண்டிடவே
சொர்க்கம் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

உலக ஆசை துறந்திடவும் 
உன்னில் நான் அழிந்திடவும் 
உன்னைத் தான் வேண்டுகிறேன் 
நீ தந்து அருள்வாயே!

==========
யாரப்பி பில் முஸ்தஃபா 
பல்லிغங் மகாஸிதனா 
வஸ்மحஹ் லனா மா மضழா 
யா வாசிعஅல் கரமி 

மவ்லாய ஸல்லி வஸல்லிம்
தாஇமன் அபதா 
அலா ஹபீபிக خகைரில் 
கخல்கி குல்லிஹிமி