தென் இந்தியா, காயல்பட்டிணத்தில் மறைந்து வாழும் கௌதனா ஷெய்கனா உமர் வலியுல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மீது அவர்களின் திருப் பேரர் ஷெய்கனா ஜலீல் முஹ்யித்தீன் காதிரி ஸதகலி ஹழ்ரத் நாயகம் அவர்கள் பாடியது
தெள்ளமுதம் என இனிக்கும் தெளிவுரையாலே
மக்கள் உள்ளமிசை நெறி விதைக்கும் உமர் ஒலி மேதே
1. வல்ல இறை அவன் உகந்த ஒலி அறவோர்கள்
நிறை நல்லபதி காஹிர் உறை நவமணி நீரே
தொல்லை துயர் நீங்க – தொடர்ந்து நலம் ஓங்க
தொல்லுலகில் எனக்குதவி தந்திடுவீரே
2. அண்ணல் அப்துல் காதிர் அவர் அருந்தவ சேயாய்
விண்ணும் மண்ணமைத்த முதலவனின் மாண்புறு நேயா
எண்ணி உமது நாமம் - இதயம் உருக பாடும்
என் இதயம் ஒளி பெறவே உதவிடுவீரே
3. கருத்தொளிரும் காவியமாய் காசினி போற்றும்
மிகு திருவிளங்கும் அல்லஃபல் அலிஃப் தந்தவர் நீரே
பொருத்தமுடன் இங்கே - புகழுடனே வாழ
உரித்துடனே வேண்டுகிறேன் உதவிடுவீரே!
4. முவ்விரண்டு வருடங்களாய் மஸ்ஜிதுன்னபவி
தனில் செவ்விய நற்போ தகராய் திகழ்ந்தவர் நீரே
கவ்வும் பிணிகள் மாற - கவலை அகன்று ஓட
எவ்வமற எனக்கு இங்கு துணை புரிவீரே
5. தங்கள் புகாரி ஜிஃப்ரி தவமணியோர்க்கு
இங்கு துங்க கலீஃபாவெனும் ஓர் தகை நிலை ஏற்றீர்
தங்கடத்தில் ஆழ்த்தும் - தீயர் உறவை நீங்கி
இங்கிதமாய் வாழும் வகை ஈந்திடுவீரே
6. மெத்த மணம் கமழும் தைக்கா மன்றத்தைத் தேடி
வந்து நித்த முத்து சன்னதியில் நின்றுமை நாடி
சித்தம் கனிந்து வேண்டி - சீர் நும் புகழை பாடும்
பௌத்திரர் ஜலீலின் முகம் பார்த்திடுவீரே
7. தீந்தமிழின் இசையில் உங்கள் திருப்புகழ் சொன்னோர்
அதை சந்தமுற பாடுகின்ற சகலரும் இங்கே
அந்தமுற வாழ - அவன் அருளைத் தேட
தந்தகமும் துணை புரிந்து காத்திடுவீரே