கதீஜா எம் தாயே رضی اللہ عنھا
கண்ணுக்கு கண்ணான
மன்னர் எம் நபியை
கண்ணிமைப் போல் காத்த
கதீஜா எம் தாயே
மருவேதும் இல்லா
முழு மதியைப் போன்ற
கருணை முஹம்மதரை
மணந்தே சிறந்தீர்
கதீஜா எம் தாயே (3)
இறைப் போற்றும் தாயே
=========
விண்ணில் உலவிடும்
ஆதவன் அன்றும்
முன்றிலில் ஒளிர்ந்திட
கனவொன்று கண்டீர்
பின்னாளில் நபியொருவர்
நும் இல்லம் நுழைவார்
என்றறிஞர் கூற
மகிழ்ந்தே இருந்தீர்
=========
வஹீ வந்தவ் விரவினில்
விரைந்தே நும் இல்லம்
வந்தங்கு தம்மை
போர்த்திடச் சொல்ல
போர்த்தியும் தேற்றியும்
நபி மொழி ஏற்றீர்
பார்ப் புகழ்ந்தேற்றும்
கதீஜா எம் தாயே..
=========
செழும் பொருளைக் கொண்ட நீர்
செல்வமனைத்தும்
நபி தனில் சேர்த்தே
இன்பமடைந்தீர்
நன் மார்க்கம் தழைக்க
உறுதுணை தந்தீர்
நன் நபியின் துணையே
கதீஜா எம் தாயே..
=========
மன்னானிறையும்
ஜிப்ரீலமீனும்
நல்லோரே உமக்கு
முகமன் உரைத்தார்
புவி வாழும் எல்லா
பெண்களில் நீரே
புகழோங்கியோர் என்பர்
அறிவோர்கள் இங்கு
=========
நும் பிரிவில் வாடும்
ஹபீபாம் நபியை
இறையோனாம் அல்லாஹ்
அழைத்தருஷில் ஏற்றி
கவலைகள் போக்கி
உரை தந்து மகிழ
கனியோனும் கலந்தான்
மிஃராஜ் இரவில்
கவி: ஹாஜி S.H. பாகிர் ஸாஹிபு ஃபஹீமீ