கனியே ரமழானே
ஆக்கம்: கவிமகன் காதர்
அருள்மேவும் திரு ரமழானின் மாதம்
இருள் நீக்கும் மதியாய் வந்தது
மணம் வீசும் மறை ஃபுர்கானின் வேதம்
மாண்பாக மலராய் வந்தது
பண்பின் நோன்பை நோற்பதால்
பாவக் கறைகள் நீங்கியே
பாலை மனங்கள் கூட சோலையாகுமே!
கனியே ரமழானே.....இனிக்கும் மலைத்தேனே
பிணிதீர் மருந்தாகுமே..... (அருள் மேவும்)
============
இந்நாளில் அன்போடு நாமேற்கும் நோன்பு
ஆன்மாவின் பாவம் தீர்க்குமே....
கண்ணான நம் நாதர் கரமோடு இணைத்து
பொன்னான சுவனம் சேர்க்குமே....
ஏற்போமே தாகம்.... நீங்கி விடும் மோகம்
ஏகோனின் அருளை நமதாக்குமே
நாம் செய்த பாவம்.... வேரோடு சாயும்
நெருங்கிடும் தீங்கை அது தாக்குமே.......
கனியே ரமழானே.... இனிக்கும் மலைத் தேனே
கண்ணீரின் காயங்கள் காணாம லாக்குமே
============
இந்நாளில் அன்போடு நாமார்க்கு மீந்து
இல்லாமை இல்லாம லாக்குவோம்
பொல்லாத சைத்தானை தூராக்கி வைத்து
நற்செயலை நெஞ்சோடு ஏந்துவோம்.....
பூவாச மேவும்....பூமானின் நேசம்
பொன்னாசி என்றும் பரிசாகுமே....
லைலத்துல் கத்ரின் காருண்ய மேகம்
ஆலத்தின் மேணி வர்ஷிக்குமே ...
கனியே ரமழானே ..... இனிக்கும் மலைத் தேனே
கண்ணீரின் காயங்கள் காணாம லாக்குமே....
============
ஆகாயம் கடல் காற்று நிலம் நீரை யமைத்து
வாகோடு ஆட்சி செய்யும் இறைவன்
தூதான ஏந்த லெங்கள் முஸ்தபாவின் மீது
தேயாத அன்பினோடு நாளும்
ஏராளம் சொல்வோம் எல்லோரும் சொல்வோம்
ஏற்றமிகு சலவாத் நிறைவாகவே
சங்கைமிக மேவும் சீரான மாதம்
சிறப்புடன் கடமை நிறைவேற்றுவோம்...
கனியே ரமழானே ..... இனிக்கும் மலைத் தேனே
கண்ணீரின் காயங்கள் காணாம லாக்குமே....